Tuesday, 11 April 2017

மோட்டார் வாகனச் சட்டமும், குற்றங்களுக்கான அபராத விபரமும்...!

மோட்டார் வாகனச் சட்டமும், குற்றங்களுக்கான அபராத விபரமும்...!


நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணங்களில் முக்கியமானதாக, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை சரிவரி கடைபிடிப்பதில்லை என்றும், பலருக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சிலர் அறியாமல் வாகனம் ஓட்டும்போது தவறுகளை செய்ய வாய்ப்புளளது. அவர்களுக்காக மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் அதில் தவறுகளுக்கான அபராத விபரங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. லைசென்ஸ் இல்லைன்னா...
18 வயதுக்கு உட்பட்ட மைனர் வண்டி ஓட்டுவதும், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 181ன் கீழ் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
 

02. அனுமதித்தாலும் குத்தம்தான்
டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பதும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 180ன் கீழ் தவறு. இதற்கு ரூ.1000 அபராதமாகவும், மூன்று மாதங்கள் சிறை தண்டனை வழங்க வழியுண்டு..

03. ஓவர்ஸ்பீடு
அதிவேகத்தில் வண்டி ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டம் 183-1 ன் கீழ் ரூ.400 அபராதமாக விதிக்கப்படும்.
 

04. இடையூறு
போக்குவரத்திற்கு இடையூறு செய்தால் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 201ன் படி ஒரு மணிநேரத்திற்கு ரூ.50 வீதம் அபராதம் விதிக்க முடியும்.

05. பதிவு செய்யாத வாகனம்
புதிய வாகனம் வாங்கியுடன் பதிவு செய்யவில்லை என்றால் For Regn என்று நம்பர் பிளேட்டில் எழுதியிருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், தற்காலிக பதிவு எண்ணை எழுதி ஒட்டியிருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் 192ன் கீழ் ரூ.5,000 வரை அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
 

06. தகுதி இழந்தவர்கள்...
ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு, தகுதி இழந்தவர்கள் வாகனத்தை இயக்கினால், மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 182-1ன் கீழ் ரூ.500 அபராதம் விதிக்க முடியும்.

07. தாத்தா வீட்டு ரோடு
எங்க தாத்தா வீட்டு ரோடு என்ற நினைப்பிலோ அல்லது சிக்னல் நெரிசலிலோ நடைபாதையில் வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டம் RRR 177 கீழ் தவறு. இதற்கு ரூ.100 அபராதம் கட்ட வேண்டி வரும். அடுத்த முறை இதே தவறுக்கு ரூ.300 அபாராதம் விதிக்கப்படும்.
 

08. தாறுமாறாக ஓட்டினால்...
பிறரை அச்சுறுத்தும் விதத்திலும், விபத்தை ஏற்படுத்தும் விதத்திலும் அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184ன் கீழ் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

09. மொபைல்போன் பேச்சு
மொபைல்போன் பேசியபடி ஓட்டுதல் CMV R21(25) பிரிவு 177ன் கீழ் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே தவறை செய்தால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
 

10. செல்லமெல்லாம் வீட்டோட...
வளர்ப்பு பிராணிகளை காரில் செல்லும்போது அவை பிற வாகன ஓட்டிகளுக்கோ அல்லது டிரைவருக்கோ அச்சத்தை கொடுக்கும் வகையில் இருந்தால் மோட்டார் வாகனச் சட்டம் 177/80 ன் கீழ் அவை தவறு. இதற்கு ரூ.100 அபராதம் விதிக்கலாம்.
 

11. உடல் தகுதி
உடல் நிலை அல்லது மன நிலை சரியில்லாத நிலையில் வாகனத்தை ஓட்டுவது பிரிவு 186ன் கீழ் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
 

12. ஸ்ட்ரீட் ரேஸ்
போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 189ன் கீழ் ரூ 500 அபராதம் அல்லது ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அபராதமும், சிறைத் தண்டனையும் சேர்த்தும் விதிக்கப்படலாம்...

No comments:

Post a Comment