இறைவனை வழிபாடு செய்வதில் மலர்களே முதலிடம் பெறுகின்றன. ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனி சிறப்பாம்சம் உள்ளது. அழகிலும், நறுமணத்திலும் மலர்கள் தனிதனி இடம் பெறுகின்றது. அலங்காரத்திற்கும், திருமணத்திற்கும், திருவிழாக்களுக்கும் என பல்வேறு நிகழ்வுகளுக்கென மலர்கள் வகைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆனால் பூஜைக்கென்றே சிறப்பாக வளர்க்கப்படும் தாவரம் "மனோரஞ்சிதம்" தான்.. தேவர்களால் இறைவனுக்கு பூஜிக்கப்படும் மலர் மனோரஞ்சிதம் மலர்தானாம். எல்லா பூக்களுமே கிலோகணக்கில் விற்கப்படும் பொழுது, மனோரஞ்சிதம் மட்டும் தனி ஒரு பூ- 5 ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை, விலை வைத்து விற்க்கப்படுகிறது..
மனோரஞ்சிதம் பூவின் வாசனை, சுமார் எட்டு மீட்டர் வரை வீசும். இந்தப் பூவை கைகளில் வைத்துக்கொண்டு, எந்த வாசனையை நாம் நினைத்தாலும் அந்த வாசனையை உடனே உணர முடியுமாம்.. ஆனால் நான் முதன்முதலில் முகர்ந்தபோது எதையும் நினைக்கவில்லை; மனோரஞ்சிதத்தை தவிற!!😊ஆக, எனக்கு நினைவில் நின்றது, மனோரஞ்சிதப் பூவின் வாசனை மட்டுமே!!
அறிவியலாளர்கள் இந்த பூவில் Methyl benzoate என்ற இராசயனம் உள்ளது. இந்த ரசாயணம் பொதுவாக நிறைய பழங்கள், பூக்களில் உள்ளது. அதனால் தான் மனோரஞ்சித மலரை கைகளில் வைத்து கொண்டு, வேறு பழத்தையோ, பூவையோ நினைத்தால், அந்த வாசனையை உணர முடிகிறது என்று விளக்கம் தருகிறார்கள்.
மனோரஞ்சிதம் தாவரம்:
மனோரஞ்சிதம் இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வளரக்கூடியது. சீதாபழ மர வகையை {Annonaceae} சார்ந்தது. அடர்ந்து புதர் போல வளரக்கூடியது. இரண்டுமீட்டர் உயரம் வளர்ந்ததும், கொடி போல மேலெழும்பி படரும். கொக்கி போன்ற காம்புகளில், பூக்கள் வர ஆரம்பிக்கும். பூக்கள் ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் தான் காணப்படும்.. நாளாக நாளாக அழகான மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். வாசனை ஊரையே கூட்டும்.. இதன் வாசனைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை எனலாம். நீண்ட நாட்களுக்கு மலர் வாடாமல் மணம் வீசிக்கொண்டே இருக்கும். குறைந்தது நான்கு நாட்களுக்கு வாடாது. சிவபெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மலர்.
இந்த தாவரம் இந்தியாவிலும், ஆசியாவின் வெப்பமண்டலக் காடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அதிகம் உள்ளது. மனோரஞ்சித தாவரத்தின் காய்கள் கொத்துகொத்தாக பச்சை நிறத்தில் காணப்படும். பழங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பார்பதற்கு எலுமிச்சை பழத்தை ஒத்திருக்கும். ஆமணக்கு விதை போல கொட்டைகள் இருக்கும்.
மனோரஞ்சிதம் வளர்ப்பு முறை:
நல்ல செழிப்பான மண் வளம், நீர் வளம் உள்ள இடங்களில் செழித்து வளரும் தன்மை கொண்டது மனோரஞ்சித தாவரம். இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து பலன் தரக்கூடிய பணப்பயிராக விவசாயிகளுக்கு இது விளங்குகிறது. இதனை விதைகளின் மூலமும் கிளைகளை பதியம் போடுவதின் மூலமும் வளர்க்கலாம். விதைகள் மூலம் வளர்க்கும் பொழுது, குறைந்தது 5- ஆண்டுகளாவது ஆகும் பூக்கள் பூக்க. பதியம் போட்டு வளர்க்கும் போது இரண்டு ஆண்டுகளில் அடர்ந்து வளர்ந்து பூக்கள் பூக்கும். இதன் பூக்களை பறிப்பது அவ்வளவு சுலபமல்ல; மிகுந்த கவனத்துடன் பறிக்க வேண்டும். ஒவ்வொரு பூக்களுக்கு பின்புறம் மொட்டுக்கள் இருக்கும். அவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படாமல் பறிக்க வேண்டும். பூக்களை பறித்த உடன் தண்ணீரில் போட்டுவிட வேண்டும். ஈரப்பதத்துடன் பேக் செய்து பின்னர் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
மற்ற மலர் சாகுபடிகளை விட, மனோரஞ்சித மலர் சாகுபடி, விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும்.
இதன் காய்கள் பழுத்தால் மாம்பழம், கொய்யாப்பழம் போல நல்ல வாசம் வீசும். எப்பொழுதும் ஈரப்பதத்தோடு மண் இருக்க வேண்டும் என்பதால், இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சுவது சிறந்தது. இயற்கை உரங்களே போதுமானது. எந்த பூச்சி தாக்குதலும், நோய்தாக்குதலும் அதிகம் ஏற்படுவதில்லை.
மனோரஞ்சித மலரின் சிறப்பான அம்சங்கள்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதிலே மலரை போட்டு விட்டால், அறை முழுவதும் வாசனை வீசும். வாசனை திரவியங்கள் தயாரிக்க அதிகம் பயன்படுகிறது. மனோரஞ்சித மலரின் வாசம் அதிக வலிமை பெற்றது. மனதை மட்டுமல்லாது, அதிகம் நுகர்ந்தால் சித்தத்தையும் பாதிக்கும். இதன் அதிக நறுமணத்தன்மையால் வசீகரிக்கப்படுவதால், இந்த மரத்தின் அடியில் பாம்புகள் தஞ்சம் கொள்ளும். அதனாலயே இந்த தாவரத்தை வீடுகளில் வளர்க்க அஞ்சுவார்கள். ஆனால் சிலர் மாடிதோட்டத்திலும் வளர்க்கிறார்கள்.. நான் கேள்வி பட்டவரை, இதுவரை பாம்புகள் ஏதும் வரவில்லை என்றே அவர்கள் கூறினார்கள்.
இதன் வாசனை மன்மத உணர்வுகளை தூண்டக் கூடியது. அதனால் மதன்மஸ்த் என்றும் குறிபிடப்படுகிறது. மனோரஞ்சித மலர் மற்ற பூக்களைப் போல ரோஜா, செம்பருத்தி, டேரி பூக்களைப்போல வசீகரிக்கும் அடர்ந்த நிறங்களில் இல்லாத குறையை, அதன் அதீத ஆட்கொள்ளும் வாசனையில் ஈடுகட்டிவிடுகிறது. அதனால் அர்த்த ஜாம பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலரில் ஒன்றாக இடம்பெறுகிறது. மஞ்சள் நிற மனோரஞ்சித மலர்களை கொண்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சோமாஸ்கந்தரை , ஸ்ரீ கற்கபாம்பாள் உடனுடைய ஸ்ரீ காபாலீஸ்வரர் திருதலத்தில் சென்று தரிசிக்கலாம்.
மனோரஞ்சித மலரின் பயன்கள்:
தென் இந்தியாவில் மனோரஞ்சித மலர்கள் இறைவனை பூஜிக்கவே மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சீன தேசத்திலோ வணிக ரீதியாக வர்த்தகம் செய்கின்றனர். மனோரஞ்சித தாவரத்தின் இலைகளையும் பூக்களையும், காய்களையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். மேலும் மலரின் தீவிர வாசனையை, வாசனை திரவியங்களும் , கூந்தல் தைலங்களும் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். மனோரஞ்சித இலையினை கொண்டு தேநீரும் தயாரிக்கின்றனர். நம்நாட்டிலும் கிராமங்களில் காலரா வியாதிக்கு கஷாயம் செய்து பயன்படுத்தியதாக தெரிகிறது.
மனோரஞ்சித மலர்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்கிறது. தூயதமிழில் இந்த மலரின் ஆன்மீக பெயர் "தெளிந்தமனம்" என்றே உள்ளது.
நன்றி உறவுகளே!!..
இவ்வளவு நேரம் உங்கள் அருமையான நேரத்தை வலைதளத்தில் செலவழித்து இந்த பதிவை படித்ததற்கு.. ஏனெனில் இப்பொழுதெல்லாம் வாசிக்கும் வழக்கம் நம்மிடம் குறைந்துவிட்டது. எல்லாமே fast. எவ்வளவு அருமையான, பொன்னான விஷயமாயிருந்தாலும் கண்மூடி திறக்கும் ஒரே நிமிடத்தில் முடிந்துவிட வேண்டும். ஆனால் ஒரு தகவலை மிக வேகமாக, காதால் கேட்டு கடந்து போவதை விட, வாசிக்கும் போது, நம் மனதிற்கும் அறிவிற்கும் தகவல்கள் கொண்டு செல்லபட்டு, பதியப்படுகிறது. அதனால் தான் ஒரு சிறந்த, திறமையான ஆசிரியர்கள் பாடத்தை கற்று தந்தாலும் அதே விஷயங்களை கொண்ட புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மாணவர்களுக்கும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவது நம் கடமை. யோசித்து பாருங்கள் புத்தகங்கள் வாசித்த காலங்களில் நம் வாழ்கை எவ்வளவு நலமாயிருந்தது. யோசிப்போம். வாசிப்பதை கொஞ்சமாவது வழக்கமாக்கி கொள்ள முயற்சிப்போம்!!
நன்றி.
இப்படிக்கு உங்கள்
செண்பகராஜ் க
No comments:
Post a Comment